துறையூர் சப் ரிஜிஸ்டிரார் அமுல். குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 19.11.1933 

Rate this item
(0 votes)

பொதுஜன ஊழியன் தோழர் வி.ஜி.பிச்சை எழுதுகிறார். 

துறையூரில் திரு. சி.எம். சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் சப்ரிஜிஸ்டர்ராயிருக்கிறார். அவர் பத்திரம் ரிஜிஸ்ட் செய்யப்போகும் விபரந்தெரியாத பார்ப்பனரல்லாதாருக்கு ரிஜிஸ்டர் விஷயமாக தெரியாத சங்கதிகளை சொல்லிக் கொடுத்தும் உதவி செய்வதற்கு பதிலாக அவர்களை மிரட்டி நஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார். 

உதாரணமாக சென்ற 10-ந் தேதி பழனியாண்டி முத்திரியன் என்ப வரும். நானும் ஒரு வீட்டுக் கடன் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய அவரிடம் போனோம். அவர் மேற்படி பழனியாண்டி முத்திரியனைக் கூப்பிட்டு எந்த ஊர் என்று கேட்க அவர் ஆதனூர் என்று சொன்னாராம். அதற்கு, பத்திரத்தில் உள்ளூர் என்றுதான் இருக்கிறது.ஆதனூர் என்று போடவில்லை என்று அவர் மிரட்ட, பழனியாண்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் போய் உள்ளூர் என்பது ஆதனூரில் ஒரு பாகம் என்றும் அப்படியே சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அவர் அதைக் கேட்காமல் துறையூர் டிவிஷனில் உள்ளூர் என்ற கிராமமே கிடையாது என்று கூறி மேற்படி பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்ய மறுத்துவிட்டார். 

பிறகு மறுநாள் ஊர் கர்ணத்துடன் மேற்படி பழனியாண்டியை அனுப்ப மேற்படி பத்திரம் ரிஜிஸ்டர் ஆகிவிட்டது. முந்தினதினம், துறையூர் டிவிஷனில் இல்லாத மேற்படி உள்ளூர் கிராமம் மறுநாள் எப்படி அங்கு நுழைந்ததோ தெரியவில்லை. முந்தினநாள் அவர் மறுத்ததால் எங்களுக்கு ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களைப் பாருங்கள். 

இரண்டாவது 22-வயதுள்ள ஒரு பெண் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வந்தாள். சப்-ரிஜிஸ்டிரார் அந்தப் பெண் இன்னும் மேஜராகவில்லை என்று ரிஜிஸ்டர் செய்ய மறுத்து விட்டார். அந்தப் பெண்ணுக்கு வயது 22 என்றும், கையில் குழந்தை இருக்கிறதென்றும் கூடச் சான்றிருந்த கர்ணம் எவ்வளவோ சொல்லியும் அதை ஒப்புக்கொள்ளாமல் பிறப்பு சர்ட்டிபிக் கேட் கொண்டு வரச்சொன்னாராம். 

 

கர்ணம் அதற்குத் துறையூரில் 20 வருடத்துக்கு முந்தின ஜனன மரண ரிஜிஸ்டர் இருக்குமா அல்லது முசிரிக்குப்போய் வாங்க வேண்டுமா என்று கேட்க சப்-ரிஜிஸ்டிரார் இவ்விடம் வாய்ப்பேச்சு ஒன்றும் கூடாது, மனு எழுதிக்கொண்டு வந்து கொடு என்றாராம். 

கடைசியில் கர்ணம் அந்த 3 ரூ. பத்திரத்தைக் கிழித்து விட்டு தன் கையில் இருந்த இரண்டேகால் ரூபாய்க்கு வேறு பத்திரம் வாங்கி, முந்தினதிலும் குறைந்த தொகைக்கு பத்திரம் எழுதி அந்தப் பெண்ணின் தகப்பனை கார்டியனாகப் போட்டு ரிஜிஸ்டர் செய்ய வேண்டியதாயிற்று. 

இப்படியெல்லாம் ஒன்றும் அறியாத ஏழைக்குடிகளை அனாவசிய மாக கஷ்டப்பட படுத்துவது சர்க்கார் உத்தியோகஸ்தருக்கு அடுக்குமா? ஆகையால் துறையூருக்கு நல்ல அனுபோகமுள்ள ஒரு பார்ப்பனரல்லாத சப்-ரிஜிஸ்டிராரை நியமித்தால் ஜனங்களுக்கு பெரிதும் அனு கூலமாயிருக்கும் என்று அதிகரித்து தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

இவ்வாறே பலபார்ப்பன சப்-ரிஜிஸ்டிரார்கள் ஜாதி துவேஷத்தினால் தங்களிடம் பத்திரம் ரிஜிஸ்டருக்கு வரும் பார்ப்பனரை ஒரு விதமாகவும் பார்ப்பனரல்லாதாரை ஒரு விதமாகவும் நடத்துவதாகவும், சில இடங்களில் பார்ப்பனரல்லாதாரை மேல் வேட்டியை எடுக்கும்படி செய்து அவமானப் படுத்துவதாகவும், பத்திரம் ஒன்றுக்கு இவ்வளவு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் நமக்கு பல இடங்களிலிருந்தும் புகார் கடிதங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. இத்தகைய பார்ப்பன சப்-ரிஜிஸ்டி ரார்கள் தாங்கள் பொதுஜன ஊழியர்களென்பதை மறந்துவிட்டு, சட்ட விரோதமான முறையில் நடந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக் கிறோம். நாம் ஆதிமுதலே கூறிவந்திருக்கிறபடி அரசாங்க உத்தியோகங் களை வகிக்க, பார்ப்பனருக்கு லாயக்கில்லை என்பதற்கு இது தக்க அத்தாட் சியாகும். மேல் அதிகாரிகள் இவ்வித ஒழுங்கீனங்களை சரிப்படித்திடும் பொதுஜனங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்தி குறிப்பிடுகிறோம். அரசாங்க இலாகாக்களில் நூற்றுக்கு 90 வீதம் உத்தியோ கங்களை ஜாதித் துவேஷமுள்ள ஒரு சிறிய வகுப்பார் கைப்பற்றியிருப்பதே இவ்விதக் கேடுபாடுகளுக்கு மூல காரணமாயிருக்கிறது. இந்த நிலைமை அடியோடு மாற்றப்பட வேண்டியது அத்தியாவசியம் என்று சர்க்காருக்கு எடுத்து காட்ட விரும்புகிறோம். 

குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 19.11.1933

 
Read 41 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.